Friday, January 31, 2014

நீ நான் இணையம்

முழுதும் திருத்தப்படாத
விக்கிப்பீடியாப் பக்கங்களில் 
எளிதில் தொலைந்து போகலாம்  
ஒரு வரலாறு 

முத்தக் காட்சியே 
முன்னால் வரும் காணொளிகளில் 
சாட்சியற்றுப் போகலாம் 
ஒரு படுகொலை 

சமூகவலைச் சுவர்களில் எறியப்படும் 
விளம்பரச் சானங்களில் வளரும் 
புழுக்களில் அமையலாம் 
புதிய அரசியல்

Wednesday, January 22, 2014

பதிய முடியாமல் போனவைகள்

முடி திருத்துபவனின்
முக மொழி
முகத்தோடு
பேசித் தீர்த்த
மௌனத்தை....

சிவமந்திர் வாசலில்
பூக்கள் விற்கும் பள்ளிச்சிறுமி
ஒருநாள்
அரசு பூங்காவில்
அரளிப் பூக்கள்
பறித்துக் கொண்டிருந்ததை...

பயன்பாட்டில் இல்லாத 
பழைய கணினிக்குப்பைகளை
அள்ளிச்செல்லத் தயங்கிய
பிச்சைக்காரப் பாட்டியையும்
அவள் விழிகள் 
எழுப்பிய வினாக்களையும்....

வாடகை வீட்டை காலி செய்து
புறப்படும் பொழுதில்..,
சோறு போட்டுப் பழகிய
தெரு நாயிடம்
சொல்லிப் பிரிய
பாஷைகள் அற்று நின்றதுபோல்...
...........................................................
பதிய முடியாமல்
போனது பல!!!

Friday, December 21, 2012

இனிமேல் உலகம் அழியாது !!!

எங்கள் நிலங்களில்
வெட்டிப் பிடுங்கி எரிய
பச்சை மரங்கள்
மிச்சம் இல்லை..!

எங்கள் வயல்களில்
விவசாயப்
பயிர் விதைக்க
உயிர் மண் இல்லை..!

எங்கள் நதிகளில்
அணைகட்ட நீரும் இல்லை,
எங்கள் கரைகளில்
அள்ளிக்கட்ட மணலும் இல்லை
( நதிகளே இல்லை )..!!

நாங்கள் ஆக்சிஜனை
சுவாசித்தே
வருடங்கள் பல ஆகிவிட்டது..,

எங்கள் உலகம்
ஏற்கனவே அழிந்துவிட்டது...

எஞ்சியிருக்கும் சில பிணங்கள் மட்டும்
இன்ன பிற அழிக்கிறோம்...!!!

Monday, December 3, 2012

ஊர்ப் பேசிய கனவு


வேம்பாருக்கு
அடுத்த வெட்டுக்காட்டில்
ஒத்தப்பனை பழுக்க
புழுவும் புத்தெரும்பும் தின்னும்,

பழையகாயல்
டையேர்காட்டுப்
பெத்தநாச்சிக்கு வைச்ச பொங்கல்
காக்கையும் குயிலுமே  சாப்பித்தீரும்,

முருகங் கோயில்
தெப்பத்து தண்ணீரை
மீன்கள் முட்டையிட்டுக்
குஞ்சு பொறித்துச்
சுத்தம் செய்யும்,

பார்த்துப் பழகியவை
பார்த்துப் பார்த்துச்
சலிக்காமல்....

கிணறு கண்மாயில்
குளிக்க களைத்ததில்
பின்பகலுக்கு
வேப்ப மரத்தடியில்
வயர்க்கட்டிலில் உறங்கி,,,

ஒரு நிலவுக்கு
ஆயிரம் நட்சத்திரங்களை
துணை வைத்த
சூரியன் தேடி..
இரவில் மொட்டைமாடியில்
உறக்கம் வரும்வரை
ஊர்க்கதை பேசித்திரிய..

முற்றமும்  கொல்லையும்
விட்டு
ஒரு வீடு கட்டியபின் ..
ஊருக்கே வந்துவிடு !!! - என

ஊரே வந்து பேசியது
ஊர்உறங்கிய முந்தைய சாமத்துக் கனவில் .!!

Monday, November 26, 2012

புள்ளிகள் மோதும் கோடு




ஒரு முறை கூட 
திறக்கப்படாத 
என் வீட்டு 
ஆங்கில அகராதியின் 
வார்த்தைகள் போல் 
பெருகிக் கிடக்கிறது

இரண்டு அதிகாரங்களுக்கு  மேல் 
படித்திராத 
திருக்குறளின் 
காமத்துப் பால் 
கொண்ட பொருள் போல் 
நிறைந்திருக்கிறது 

ஒரு தடவைக்கு மேல் 
திண்ணப்படாமல்  
அலமாரியில் விட்ட 
காய்ச்சல் மாத்திரைகள்
வீசும் நெடி போல் 
அடர்ந்திருக்கிறது 

போதைக்குப் பின் 
பாட்டிலுக்குள் மிஞ்சும் 
கடைசிச் சொட்டு 
மதுவின் 
ரசாயனச் சிரிப்பில்...

தீர்க்கப் படவேண்டியவைகளின் 
வரிசை வட்டமாக விரிதலில்...

புள்ளிகள் மோதும் கோட்டில்...
புரிந்து போகும் பூலோகமும் !!

????

புரியும்படி சொல்லக் கேட்கிறாய்...,

கழிக்க முடியாத 
குப்பைகள் நிறைந்ததுதாண்டா 
நீயும் நானும் 
சேர்த்து சேர்த்து வைத்த 
இவ்வுலகம் !!

Thursday, November 15, 2012

பணம் செய்யாப் பொழுதுகளில்






'ஏ டி எம்' க்கு வெளியே 
கிழிக்கப் படும்                                                                  
காகிதங்களின்  
பூஜ்ஜியங்களில் 
சேமிப்பு !

ஒட்டகத்துத் 
தண்ணீர்ப்பையை 
தயார் செய்ய 
வந்து போகும்  
வசந்த காலத்து வருமானம்  !

அழைப்புக் காருக்கும் 
அரசுப் பேருந்துக்கும் 
நடுவே 
ஏறி இறங்கும்
பங்குச்சந்தை !

கணக்கில் பற்று
மிச்சம் இல்லாத 
பொழுதுகளில் 
ஓய்வெடுக்கும் 
என்னைப் போலவே
என் செல்பேசி..!!

Wednesday, September 5, 2012

தீபங்களை அணைத்த தீ !!

இரண்டு ஆயிரம் போனஸ் கிடக்கும் என வேலைக்குப் போய்
இரண்டு லட்சம் அரசு நிவாரணம் வாங்கிய உடல் கருகிய ஏழை மக்களுக்காக......,

இந்த தீபாவளியை கரி'நாள் ஆக்குவோம்
பட்டாசுக்குப் பதில் மெழுகுவர்த்தி எரிப்போம் !!

பொட்டு வெடி போடும் பொடுசுகளுக்கு பலூன்களை உடைத்து சப்தம் தருவோம் !
அப்பாக்கள் குழந்தைகளோடு ( தவமாய்த் தவமிருந்து!!! ) குலதெய்வம் கோயிலுக்குப் போவோம் !!

கிப்டு பாக்ஸ்' வெடி போடும் மாடி வீட்டுக் காரனை எல்லாம்
சிவகாசியின் சில வெடிக்காத ஆலைகளுக்குச் சுற்றுலா கூட்டிப் போவோம் !!

சட்டத்தின் முன்னால் பட்டாசு முதலாளிகளின் திரியை உரிப்போம்.!
குட்டி ஜப்பானின் எஞ்சிய பட்டாசுகளை எடுத்துப்போய் கூடங்குளம் அனு உலையில் எரிப்போம்..!

துப்பாக்கி' ரிலீசுக்கு ஆயிரஞ்சரம் வெடிக்கும் முன் ..வெடித்துக் கருகிய உயிர்களுக்காய் ஒரு துளி கண்ணீர் வடிப்போம் !!!


இப்படிக்கு ,
சுப்ரமணிய பாண்டி