Monday, June 25, 2012

குயில்



தினந்தோறும்
கூத்து வைப்பதால்                                  
அடை காக்க நேரமில்லை
வனத்துக் குயிலுக்கு !!! 

மேற்'கத்திய' குயில்


நன்செய் வாய்க்காலில் நான்பாட வளர்ந்தபயிர்
பண்பலைப் பாட்டிற்கு நென்மேனி வளர்க்கட்டும்
கண்மாய் மேட்டுக்கு கருப்பாடு புல்மேயக்கப்
புறப்பட்ட காதுகளில் ஐப்போடு இசைக்கட்டும்

புன்செய் பக்கத்துப் புளியமரம் காய்க்கும்
தென்னை பூக்கும் என்றெண்ணிக் காத்திருந்து
பாடியே கழித்த காலம் போகட்டும் -வரும்
புதிய கலப்புரகம் வணிகம் பெருக்கட்டும்
  
              - --குயில் பாடத் தொடரும்



Wednesday, June 20, 2012

எந்திரமயமாதல்


மருந்து தடவாத குச்சி
மழைக்கு நனைந்தால்
மறு வெய்யிலுக்கு
உலர்த்துவாள் அம்மா ..!!

தீக்குச்சி அடுக்க
எந்திரம்
வந்திட்ட பின்னர்
வாசலின் வெறுமையில்
'எண்ணிக்கொண்டிருக்கிறாள்' எதையோ ??

காற்றைப் போன்ற
அவளது சுறுசுறுப்பை
அவள் அடைத்துப் போட்ட
கடைசி தீப்பெட்டிக்குள் அடைத்துவிட்டது
சீனத்து தொழில் நுட்பம் ..!

அட போகட்டும் ,,,

மூலிச் சக்கைகளும்
மூடும் 'கொண்டி'களும்
சொல்லி வைத்த
பொய்யும் திருட்டும்
போய் விட்டது !!!

மெழுகுக் குச்சிகள்
சிறை பிடித்த
முழுஆண்டு விடுமுறை
வீட்டிற்குள்
வந்து விட்டது !!!

கழிவுக் குச்சியையே
எரிபொருள் ஆக்கிய
ஏழை  வீடுகளை
காற்று அடுப்புக்கு
மாற்றி விட்டது !!!

மேல் கட்டை
அடிக் கட்டையை
அமுக்கும்
தத்துவமும் 
அர்த்தமற்றுப் போனது !!!

போகட்டும் ,

மானுடம்
எந்திரமாகிப் போகும்
எதுவும்
எந்திரமயமே ஆகட்டும் !!!