Friday, March 16, 2012

இலங்கைக் கொலைக் களத்திலிருந்து ..தமிழ்த் தாய்க்கு ஒரு வேண்டுகோள்

கண்ணகிகள் 
கற்பழிக்கப் பட்டு 
பூம்புகார் 
எரிக்கப் பட்ட பின்னர் 
எதற்கு 
உன் கால் சிலம்பு ??

அட்சயப் பாத்திரம் - ஏந்திப் 
பிச்சைக் கேட்டும் 
அகதியாய் - நிவாரண 
ஆடைக்கு நின்றும் 
ஆன பின்னர் 
எதற்கு மணி மேகலை ??

பருவப் பத்திரை'கள்
மார்புகள் பந்தாடிக் 
கூந்தல் அறுத்துக் 
கொன்று குவியுண்ட பின்னர் 
எதற்கு குண்டலகேசி தண்டட்டி ??

காலம் கடந்தும் 
நீதி பெறாமல் 
காளி தேவி 
சாட்சி தராமல் 
குலமே 
கொலையுண்ட  பின்னர் எதற்கு 
வளையாபதி ???

நிலவில் ஆடிய 
முற்றம் 
முற்றிலும் 
சுடுகாடாகிச் 
சிந்திய இரத்தம் 
இன்னும் உறையாமல் இருக்கையில் 
எதற்குச் சிந்தாமணி ???

பௌத்தம் - சமணம் 
கூறிய அர்த்தங்கள் 
மாறிய பின்னர் 
உன் அங்கங்களில் 
அவை எதற்கு ???

துறந்து வா 
தாயே ...

உன்னை 
மதம் இன 
மரபுகள் இல்லாத 
புதிய அணிகலப்படுத்த
புறப்பட்டுவிட்டேன் 
-சுப்ரமணிய பாண்டி !!!!

Tuesday, March 13, 2012

மரங்களில் நனைந்து

விரிவாக்கப் படாத சாலை
என்னை
வரவேற்கிறது
இருமருங்கிலும்
வரலாறு
வளர்த்த மரங்களோடு


வெய்யிலை
புள்ளிகளாகத் தந்த
புளிய மரங்கள்
பூக்களைச் சொரிந்து
போட்டிருக்கிறது
புதிய கோலம்

என்னைத்
தொட்டுப்
பின்னிக் கொண்டு
நட்போடு
விளையாடுகிறது
வெட்டப் படாத
கிளைகள்

மரங்களுக்கிடை
நடை போகையில்
மனதிற்குள்
எடை குறைகிறது

ஒவ்வொரு மரமும்
ஒரு கனம்
முயற்சிக்கிறது
என் மனிதம்
மைனாவாக
மாறிப் போக

பாடும் பறவைகள்
வாழும் மரங்களைக்
கடந்து போகும் முன் ..

மரங்களே கட்டுகிறது
என் மனதிற்குள்
வசந்தத்திற்கான கூடு !!!

Friday, March 9, 2012

அக்கினி

 தீக்குச்சியின் 
பற்றவைத்தலில் 
பிறக்கிறது 
ஒரு பொறி..!!

உள்ளிருந்ந்த காற்று 
ஊத ஊத 
வளர்கிறது 
சிறு தீ ..!!!

தண்ணீரின் 
பரிசத்திற்கு 
தற்காலிகமாக 
அணைந்தாலும் 

அடுத்த 
உரசலுக்கும் 
ஊதும் 
காற்றிற்கும் ..
கருவற்றுக் 
காத்திருக்கிறது 
நிரந்தரமான அக்கினி 

இன்னும் ..

எடைக்கு வாங்கிய 
நிலக்கரித் துண்டுகளை 
நெருப்புக் கங்குகள் ஆக்கி 

உருப்படிக்கு 
ரெண்டு ரூபாய் - என 
இரும்புப் பெட்டியில் 
துணி தேய்த்து
துணியே தேய்க்கும் 

கொள்ளுப் பேரனும் 
பள்ளிக்குப் போகாத ..
எங்க ஊர் 
வெள்ளாவி 
முனியாண்டியின் 
சலவைப் பெட்டியை 

அனுவளவும்
அசைக்கப் போவதில்லை 

அனு உலைக் 
கண்டிப்பும் 
மின்சாரத் 
துண்டிப்பும்..!!!

Saturday, March 3, 2012

நினைவுகளை உருவாக்குவோம்

இனி ஒருபோதும்
நினைவுகளின்
இருக்கையை
முன்பதிவு செய்ய வேண்டாம்

அவை
தானாகவே
வந்து
தடம் பதிக்கட்டும் ...!!

இனி ஒரு போதும்
இன்பச் சுற்றுலாவின்
முன் திட்டமிடல் வேண்டாம்

திசை மாறிய காற்று
நம்மை
தூரலில்
நனைக்கட்டும்..!!

இனி ஒரு போதும்
இடை நிறுத்தம் இல்லா
விரைவுப் பேருந்துப் பயணம் வேண்டாம்

சாலையோர இளநீர்
சற்று நம்
தாகம்
தீர்க்கட்டும்..!!

இனி ஒரு போதும்
நினைவுகளை
படம் பிடித்து
பத்திரப் படுத்த வேண்டாம்

நீக்கமற
காட்சியாய்
கண்களில்
நிறையட்டும்..!!

இனி ஒரு போதும்
முத்தங்களை
கடிதங்களில்
எழுதிச் சேமிக்க வேண்டாம்

பார்த்த
நொடிகளில்
பரிமாறிக்
கொள்ளட்டும்..!!

இனி ஒரு போதும்
அடுத்த வேளைக்கு
மிச்சம் வைக்க வேண்டாம்

விடியல்
மட்டும்
இரவை
விரட்டட்டும்..!!

இனி ஒருபோதும்
நினைவுகளின்
இருக்கையை
முன்பதிவு செய்ய வேண்டாம்

அவை
தானாகவே
வந்து
தடம் பதிக்கட்டும்....!!!

இன்னும் 
அடுத்த ஐந்து ஆண்டிற்கும்
அழியாமல்
இருக்கட்டும் 

விளையாட்டாக 
ஒரு பேருந்து நிறுத்த
உட்சுவற்றில்
கரித்துண்டால்
பொறித்து வைத்த
நம் பெயர்கள் ...!!!