Saturday, July 28, 2012

எல்லோர்க்கும் பெய்யும் மழை

மேகத்திடம் பிடுங்கிய
மழையை
தரையில் போட்டுச்சென்ற
காற்று ஓர் பறவை





Sunday, July 15, 2012

அகதிகள் நாகரீகம்


கூட்டு அடிமைகள் வாழ்ந்த 
குட்டித் தீவுகளுக்குள் 
தோண்டக் கிடைக்கலாம் 
'அகதிகள் நாகரீகம் ' !!

வீட்டுப் பிராணிகளாய் 
வளர்க்கப் பட்டிருக்கலாம் 
இரத்தம் குடிக்கும் 
விலங்குகளும் பூச்சிகளும்!!!

சூரியனின் எந்தத் 
திசையின் கீழும் 
இருள் அவர்களின் 
நிரந்தரப் பொழுதாய் நீண்டிருக்கலாம்!!!

இதுவரை எழுதப்படாத 
கொலைக் காதைகள் 
புதைக்கப் பட்டிருக்கலாம் 
கற்பினியின் சமாதிக்குள் !!

குருதியின் நிறம் ஒன்றே'என 
மௌனத்தில் உரையாடியிருக்கலாம் 
சடலம் ஆகும்முன் 
சண்டையிட்ட உடல்கள் !!

காகம் எறிந்த கற்களாய் 
பிணங்கள் வீசப்பட்ட 
பெருங்கடல் குவளை 
நிரம்பிப் பொங்கும் 
சுனாமியில் 
தீரக்கூடும் 
இனவெறித் தாகம் !!

கடலின் ஓலத்தை 
மொழிப்பெயர்க்கும் வரை 
நிம்மதியைத் தேடி அலைந்த 
படகின் கதையை - அது 
சொல்லப் போவதில்லை !!!

Friday, July 13, 2012

முகநூல் ( Face Book )



முல்லை பெரியாறு அணையில் மழை பெய்கிறது !

கூடங்குளம் உலையில் மின்சாரம் கிடைக்கிறது !

மூத்த குடிமகன் யாரென்று தேர்தலுக்கு முன்னே தெரிந்து விட்டது!

சில நாட்களாக 'பவர் ஸ்டார்' சீனிவாசன் பேட்டி இல்லை !

இன்னும் சில நாட்களுக்கு மட்டைப் பந்து போட்டி இல்லை!

நாளை பில்லா - டூ, ட்ரைலர் போடுகிறான் கணேசு !!

மறுபடியும் 'அபியும் நானும்' விமர்சனம் போடுகிறான் அலெக்சு!!

'லைக்' போட யாருமில்லாமல் கவிதை போடுகிறான் எஸ் எம் பாண்டி !!!




Friday, July 6, 2012

வீடாந்தன்மை






பரண் மேல் 
கவிழ்த்திய 
பித்தளை அண்டாவிற்குள் 
எதையோ மறைத்து வைத்து 
மறந்து விட்டாள் பாட்டி!! 

தாழ்வாரத்தில் 
சாய்வு நாற்காலிக்கு
சற்றுத்தள்ளி வைத்து 
இலங்கை வானொலிச் செய்தி 
இரைச்சலின்றிக் கேட்பார் தாத்தா..!! 

திண்ணைக்கு கீழ் 
இரண்டாம் அடுக்கில் 
நாட்டுக் கோழி முட்டை இட்டு 
பாம்பு வந்து தின்றதாக 
பார்த்ததே இல்லை அம்மா..!!

சாரளத்து
ஓரத்துக் கம்பியில் 
வண்ணம் மங்கியபின் 
பொங்கல் மறுபூச்சுக்கு
சுண்ணாம்பே தடவுவார் அப்பா..!!

கொல்லையின் 
வேம்பு - தென்னை - முருங்கை  
வேர்பிடுங்கி 
அம்மி - உரல் - ஆட்டுக்கல் 
அகற்றி...

ஒட்டு வீடு உடைத்த 
விரிந்த பரப்பில் 
மாடி வீடு எழுப்பிய 
கூரையின் உயரத்தில்..

ஒவ்வொரு 
தொடர் மின்வெட்டுப்
பொழுதுகளிலும் 
தொடர்ந்து தேடுகிறேன் ..,

புதிய வீடு கட்டிப் 
புதைந்த 
வீடாந்தன்மையை ..!!!