Wednesday, September 5, 2012

தீபங்களை அணைத்த தீ !!

இரண்டு ஆயிரம் போனஸ் கிடக்கும் என வேலைக்குப் போய்
இரண்டு லட்சம் அரசு நிவாரணம் வாங்கிய உடல் கருகிய ஏழை மக்களுக்காக......,

இந்த தீபாவளியை கரி'நாள் ஆக்குவோம்
பட்டாசுக்குப் பதில் மெழுகுவர்த்தி எரிப்போம் !!

பொட்டு வெடி போடும் பொடுசுகளுக்கு பலூன்களை உடைத்து சப்தம் தருவோம் !
அப்பாக்கள் குழந்தைகளோடு ( தவமாய்த் தவமிருந்து!!! ) குலதெய்வம் கோயிலுக்குப் போவோம் !!

கிப்டு பாக்ஸ்' வெடி போடும் மாடி வீட்டுக் காரனை எல்லாம்
சிவகாசியின் சில வெடிக்காத ஆலைகளுக்குச் சுற்றுலா கூட்டிப் போவோம் !!

சட்டத்தின் முன்னால் பட்டாசு முதலாளிகளின் திரியை உரிப்போம்.!
குட்டி ஜப்பானின் எஞ்சிய பட்டாசுகளை எடுத்துப்போய் கூடங்குளம் அனு உலையில் எரிப்போம்..!

துப்பாக்கி' ரிலீசுக்கு ஆயிரஞ்சரம் வெடிக்கும் முன் ..வெடித்துக் கருகிய உயிர்களுக்காய் ஒரு துளி கண்ணீர் வடிப்போம் !!!


இப்படிக்கு ,
சுப்ரமணிய பாண்டி

Tuesday, September 4, 2012

அய்யனார் (யார்) ??


                                                     ( Poto by Thyaharajan Jagadeesan )

பெரிய தொப்பை அய்யனார் கையில் சின்ன அரிவாள்
ஒல்லி மீசைக்கார சுடலை மாடன் கையில் பெரிய அரிவாள் !
முதிய சிற்பி மறந்துபோன முரண்பாட்டை
யார் மாற்றப் போவது ??


சாலையை  வாசல்
ஆக்கிரமித்த வீடுகளில்
எப்படி வளரும்
நேத்திக் கடனுக்கு
நாட்டுக் கோழியும்
ஆட்டுக் குட்டியும் ??

நவீன தமிழ்ப்பெயர் சூட்டும்
'வடமொழி எல்லைகளுக்குள்'
வர முடியுமா
கருப்பசாமியும் முனீஸ்வரனும்???

மதுரை வீரன் , மாடசாமி
கூடவே நின்றாலும் குழந்தைகள்
விளையாடப் பொம்மையேயாகும்
குதிரையும் நாயும் -இனி
எப்படிக் கடவுளாகும் ??

விளையா நிலங்கள்
'ரியல் எஸ்டேட்க்கு'
விலை போன
வேலிகளுக்குள் -இனி
எப்படி வேட்டைக்குப் போக முடியும்
கோட்டைச்சாமி ??

அய்யனாரை
எப்படிப் புரிந்து கொள்ளும்
எதிர்காலம்??

Saturday, September 1, 2012

சார்ந்திருத்தல் ??



பூப்பதற்கே 
மெனக்கெட்டுப் பூக்கும் 
பூக்களிடம் விசாரிக்கக் 
கிடைக்கும் 
சாராதிருத்தலின் 
சாராம்சம் ??