Tuesday, February 28, 2012

பங்குனித் திருவிழா

அமிர்தக்கா பாட்டிக்கு
வாரிசு இல்லை
ஆடிக் குறி சொல்ல
அடுத்து ஆள் இல்லை

வில்லுப் பாட்டுக் காரனுக்கு
தொலைபேசி எண் இல்லை -அவன்
வீட்டு முகவரி
விழாக்கமிட்டிக்கு
தெரியவில்லை

கரகாட்டம்
தெருவில் ஆட
காவல்துறையின்
அனுமதி இல்லை

திங்கள் கிழமை
முளைப்பாரி , பால்குடம்
தினைமாவும் பானக்காரம்
திண்பதற்கு
பள்ளியில் விடுமுறை இல்லை

மஞ்சள் நீராடிய
வண்ணங்களில்
மஞ்சள் நிறமில்லை
அடுத்த தெருவில்
அத்தை மகள் இல்லை

அன்னதான
கடைசிப் பந்திக்கு
அப்பளமும் பாயாசமும்
எப்போதும்
மிஞ்சுவதே இல்லை

நெரிசலில்
மிதிபட்டாலும்
பிள்ளையார் எறும்புகள்
பிறரைக் கடிப்பதில்லை..!!!

Friday, February 24, 2012

இயல்பு நயம்

மானுடத்தடம் நுழையாத
மலைக்குகை இடுக்கு
எவருக்காகவோ
ஒளித்து வைத்திருக்கிறது
ஏகாந்தத்தை

நீந்திச் செல்ல முடியாத
நீர்நிலை ஆழத்தில்
எதற்காகவோ
நிலைத்திருக்கிறது
சலனமற்ற தனிமை

அடங்கிப் போகிடாத
காற்றின் நகர்வு
எல்லாத்
திசைகளின்
மேல்வைத்தது
தீராத பகை

நெருங்க விடாத
சூரியனின் 'எரிச்சல்'
எல்லோரிடமும்
கொண்டிருக்கிறது
தணிக்கமுடியாத கோபம்

இலையுதிர்த்த பருவத்தில்
வேர்களில்
சேமித்த உணவோடு
அடுத்த மழைக்காக
காத்திருக்கிறது
ஒரு மரம்

Wednesday, February 22, 2012

கவிதை??

கருப்பொருள்
அகப்படாத
வெறுமையில்
எத்தனை முயற்சியிலும் 
பிறப்பதில்லை
புதியதாய் ஒரு கவிதை


பெரும் தேடலக்குப் பிறகும்
கூர்மையான
வார்த்தைகளில்
நிரப்ப முடியவில்லை
என் நவீன கவிதைகளை

வரம்பும்
மரபும்
மறந்த
புதிய களத்திற்கு
புலம் பெயர்வதில்லை
என் எழுத்து நடை

ஏதாவது ஒற்றை வரியில்
எதுகையும்
மோனையும்
இல்லாது
எந்த கவிதையையும்
நான் எழுதி முடிப்பதில்லை

ஒரு முறையாது
கனத்த குரலில்
வாசித்துக் காட்டாமல்
பிரசுரிப்பதில்லை
எழுதி முடித்த பக்கங்களை

ஒரு பெருந் திரள்
மத்தியில்
கவிஞர்' என்று
கௌவுரவித்தாலும்

எழுதப் படிக்கத்
தெரியாத
என் சக
இளைஞனுக்குப்
புரியப் போவதில்லை
என் புத்தகங்கள்

Saturday, February 18, 2012

மறதியின் நினைவுகள்

தாயின் 
கைகள் அரவணைப்பில் 
பால் குடி 
மறந்த பிறகு 
காய்ச்சி ஆரவைத்த 
பசுவின் பாலில் 
வேகமாக வளர்ந்தது குழந்தை

அறிவியல் புத்தகத்தை 
வீட்டில் மறந்து 
விட்ட போதும் 
பக்கத்து நண்பனோடு 
பகிர்ந்து கொண்டது படிப்பு 

பிறந்த நாள் 
வாழ்த்துச் சொல்ல 
மறந்த பிறகும் 
பிரியாமல் இருந்தது 
பிரியமான நட்பு 

கொத்துச் சாவியை 
கதவில் மறந்த நாளில் 
பத்திரமாக இருந்தது 
அம்மா சேர்த்து வைத்த 
ஐந்து பவுன் நகை 

அவசரத்தில் 
மறந்து மாற்றிப் போட்ட 
உள்ளாடையோடு 
நன்றாக கழிந்திருந்தது 
அன்றைய வேலை நாள் 

ஆங்கிலப்படம் 
பார்த்தவாறு 
தொலைகாட்சிப் பெட்டியை 
அணைக்காமல்
அப்படியே 
உறங்கிய நாளில் 
கனவுகள் இன்றிக் கடந்தது 
நள்ளிரவு 

முதலில் காதலித்தவள் 
முற்றிலும் மறந்த பிறகு 
அடுத்த காதலிக்கு 
அதிகமாக எழுதப் பட்டது 
கவிதைகளும் கடிதங்களும்

எப்போதோ 
மறந்து தொலைத்த 
செருப்பில் 
மற்றவர் கால்கள் 
பயணித்துக் கொண்டே இருக்க 

மறதியின் அத்தியாயங்களில் 
முழுமை அடைகிறது 
நினைவில் வைக்க முடியாத 
நிஜமான  வாழ்க்கை..!!!

Friday, February 17, 2012

பின் நவீனத்துவம்

நிலா வெளிச்சத்தில்
பருத்திப் பால் ,
சீமண்ணய் விளக்கில்
நிலக்கடலை வறுக்கும் ,
சிறுவனுக்கு
தொல்லை தருவதில்லை
தொடர் மின் துண்டிப்பு

'பத்து ரூபாயை'
விலை ஏற்றம்
செய்யாத
பாணி பூரி
வியாபாரியை
பாதிப்பதில்லை
பங்குச் சந்தை சரிவு

காற்று குறையாத
மிதி வண்டியில்
பழைய இரும்புக்கு
பேரீச்சம்பழம் விற்கும்
பெரியவருக்கு
தெரிவதில்லை
சொகுசுப் பேருந்துக் கட்டணம்

இரண்டு பட்டம் பெற்று
இறுதி வரை
இல்லத்தரசி யாய்
இருந்து கிடப்பவளுக்கு
கிட்டுவதே இல்லை
இட ஒதுக்கீடு

கால்வாய் ஓடையில்
ஏத்து மீனுக்கும்
காய்ந்த குளத்தில்
கருவாட்டிற்கும்
காத்திருப்பவனின்
எதிர்ப்பைப் பெறுவதில்லை
அணு உலைக் கதிர்வீச்சு

அடுத்த தேர்தலுக்கும்
எம் ஜி ஆருக்கே
ஓட்டுப்போட போகும்
வெள்ளைச்சீலைக் கிழவிக்கு
விளங்கப் போவதில்லை
அலைக் கற்றை ஊழல்

Thursday, February 16, 2012

பாரதி நான் உனக்கு

பெண் சிசு
நீ எனக்கு
பேணும் தாய்
நான் உனக்கு

சிறந்த கல்வி
நீ எனக்கு
சிறு குழந்தை
நான் உனக்கு

பெண் சாதி
நீ எனக்கு
பேராண்மை
நான் உனக்கு

சொந்த மண்
நீ எனக்கு
சுதந்திரம்
நான் உனக்கு

புதிய மது
நீ எனக்கு
புலன் மயக்கம்
நான் உனக்கு

பருவ மழை
நீ எனக்கு
பாயும் நதி
நான் உனக்கு 



அன்பு வெள்ளம்
நீ எனக்கு
அணைக் கட்டு
நான் உனக்கு



காதற் கடல்
நீ எனக்கு
கட்டும் மரம்
நான் உனக்கு

இயற்கை வளம்
நீ எனக்கு
இறை வேதம்
நான் உனக்கு 



ஏட்டும் பாட்டும்
நீ எனக்கு 
எழுத்தில் பாரதி
நான் உனக்கு !!!

இனிய தமிழ்
நீ எனக்கு
இனி கவிதை
நான் உனக்கு..!!


Wednesday, February 15, 2012

பேசுபொருள் நீ எனக்கு

பூஜ்ஜிய
இடைவெளி
இயக்கத்தில்
பொருளற்றது
இயற்பியல்

தூரத்திலும்
கண்களால்
பேசியதில்
நுட்பமற்றது
தகவல் தொடர்பு

உயிர் வரை
உரையாடிய
முத்தத்தில்..
மேகமற்றுப்
பொய்த்தது மழை

உடலோடு
விளையாடிய
மொத்தத்தில்
சிற்றோடையில்
வீழ்ந்தது சூரியன்

காற்று அடைபடாத
நெருக்கத்தில்
மொழி அற்றுப்
பிறந்தது
மெய் எழுத்து....

சொல் கூடிய
சிரிப்பொலியில்
தன்னைத் தானே
மீட்டியது
வீணை !!!

தொட்டு உணரும்
பருப் பொருள்
கண்டு உணரா
பரம் பொருள்
ஆனது

பேசு பொருள்
நீயிருக்க
பொங்கும் கவி
நானிருக்க...!!!

Saturday, February 11, 2012

( மூட) நம்பிக்கை

கற்பூரம் கொளுத்தி
கருப்படித்த
முற்றத்தில்
படிந்திருக்கிறது
அம்மாவின் பாசம்...!!

காணிக்கை கொடுத்த
உண்டியலின்
உள்ளே
ஒளிந்திருக்கிறது
அப்பாவின் உழைப்பு..!!

பூனை குறுக்கிட்ட
பாதையின்
தெருக்களில்
குறைந்திருக்கிறது
பாவங்கள்..!!

திருடிய பிள்ளையார்
திண்ணையைச்
சுற்றி
வளர்ந்திருக்கிறது
அரச மரங்கள்..!!!

வாஸ்துக்கு வாங்கிய
கண்ணாடித் தொட்டியில்
வலம் வருகிறது
அழகிய மீன்கள்..!!

செவ்வாய் வெள்ளியென
கொஞ்ச நாள்
பிழைத்திருக்கிறது
பிஞ்சு ஆடும்
பிராய்லர் கோழியும்..!!

கால் மிதிபடாத
பழைய
புத்தகங்கள்
கரையான் அரித்துப் போவது இல்லை
கடைக்கு எடைக்குப் போவது மில்லை ..!!

Friday, February 10, 2012

சின்ன சின்ன கதைகள்

கற்பனையாக
அம்மா சொன்னதில்

பாழ் கிணற்றில் விழுந்த குழந்தையை
பத்துதலை பாம்பு எடுத்து வளர்த்தது ஒரு கதையில் !!!

கடவுள் தான் உலகத்தைப்படைத்து
மழை இடி மின்னல் என கட்டளை இடுவதாக இன்னொரு கதையில்!!!

கொல்லைக்குப் போன பாட்டி
பனைமர ஓலையை பேயென பயந்தது மற்றொரு கதையில்!!

ஆரம்பம் மட்டும் நினைவிலிருக்கும்
இந்த முடிவு மறந்த  கதைகளை

கேட்டு மறந்து போகவில்லை
கேளாமல் உறங்கிப் போயிருப்பேன்..!!

அவள் கூறியதில்..
அறம் வென்றிருக்கலாம்
அன்பு தலைத்திருக்கலாம்..

வார்த்தையில் எழுதி
பாதியில் முடிந்ததை

எந்த இலக்கியத்தில் சேர்ப்பது ??


டிசம்பர்

ஒரு டிசம்பர் மாத
விடுமுறை நாளில்,


எல்லா காதலர்களையும்
போல நம்மையும்
விருந்தினராக
வரவேற்றது அந்த
விருதுநகர் பூங்கா..!


அனைத்து நதிகளையும்
இணைத்த இந்தியா போல
செழிப்பாக
சிரித்துக்கொண்டிருந்தாய் நீ!


மரத்தடி நிழல்
மழைக்காலப் புல்வெளி,
அருகே,
மைதானத்தில்
மட்டைப்பந்து ஆடும்
சிறார்களென..,

அனைத்தயும் மறந்து
நான் உன்னை மட்டுமே
ரசித்துக்கொண்டிருக்க.....!


நீயோ....,
கணித பாட நூல்,
கால்குலேட்டர்,
என
ஒரு நாளிற்கான
வகுப்பறையை
தயார் செய்து கொண்டிருந்தாய்...!
என்னை மாணவனாக்கி.......!!


நான் , நீ , ஒரு பூங்கா வோடு
டிசம்பர் மாதம்
ஒவ்வொரு வருடமும் வரும்!!!

வாழ்க்கையில் இனி - திரும்பி
வரவே வராத நிமிடங்களை
வெறும் நினைவுகளாக்கிச் சென்று போகும்!!!

தொலை பேசி

இந்த 2012 -ல் புதிதாய்

உனக்கு SAMSUNG GALAXY
எனக்கு IPHONE 4S

அட்வான்சு டெக்னாலஜி
தொலைநோக்கு கேமரா..

ஐந்து விரலுக்குள்
பிரபஞ்சம்

இனி
இந்த வருடம் முழுதும்
வசந்தகாலம் ஆகட்டும்..!

ஆனாலும்

திரும்பி வரப் போவது இல்லை

நாளிற்கு
மூன்று வேளையும்
உன்னிடமிருந்து வரும்

அந்த
ஒரு ருபாய் ( காயின் )
தொலைபேசி அழைப்பின்

ஒரு
தொடர்பிற்கும்
துண்டிப்பிற்கும்
இடையில்...
தொலைந்து போன நாட்கள்..!

புதிதாய் உன்னை பற்றி

இந்த வருடத்தின்
மூன்று தினங்கள்
முடிந்தும்...,

இன்னும் எனது
புதிய டைரி
திறக்கப்பட்டு
எழுதப்படவில்லை.!

முதல் பக்கத்தில்
முதல் கவிதை
நீயே
ஆனாலும் ..
உன் பற்றிய நினைவுகளில்
எதனை - பழையது ஆக்கி
புதிதாக
எதை எழுதுவது ???

எதையோ எழுத முனைகிறேன்..
தோராயமாக...



ஆயிரம் மழைத்துளி,
ஒரு நிமிட சிரபொஞ்சி
உன் சிரிப்பு..!!

'அஸ்தம சூரிய வெட்கை'
அவ்வப்போது
-உன் கோபம்..!

'கோடை விடுமுறை
அம்மாச்சி வீடு'
உன் ஆறுதல்..!

காலம் கடக்காமல் கரைகடக்கும்
'தானே' புயல்
உன் புறக்கணிப்பு..!

திரும்ப திரும்ப
வியக்க வைக்கும் உன் தமிழ்..!!

திரும்ப திரும்ப
விரும்ப வைக்கும் உன் திமிர்...!!

இப்படி
இன்னும் பல
எழுதித் தீர்க்க..

Wednesday, February 8, 2012

பின்னணி

கடும் வெய்யில்
இலைகளை உதிர்த்தாலும்
கதிரவனோடு
பச்சயத்தை
நிறுத்துவதில்லை
பெரிய மரங்கள்..!!!

அதிக அதிர்ச்சி
அழிப்பேரலை எழுப்பினாலும்
ஆழம் குறைத்து
வறண்டு வற்றிப் போவதில்லை
பெருங்கடல்!!

அழுத்தக்காற்று
மேகங்களைக் கடத்திச்
சென்றாலும்
வெறிச் சோடிப் போவதில்லை
எல்லையற்ற வானம்..!!

மரக் கிளைகள் ,
மலைப் பாறைகள்
மறைக்கும்
வெறும் சன்னல்களுக்குப்
பின்னால் தெரிவதில்லை
இந்தப் பிரபஞ்சமும் பேரண்டமும்..!!!

பெருங் காப்பியங்கள்
நினைவில்
வைப்புது இல்லை
- எழுதப் பட்டபோது
தொலைத்த
ஓரிரு ஓலைகளை ..!!



Sunday, February 5, 2012

வாய் பாடு

உன்னை - நீ
மற்றும்
என்னால்
மட்டுமே
வகுக்க முடியும்..

ஒன்றையும் இரண்டையும்
பெருக்க
ஒன்றை இருமுறைக்
கூட்டினோம்..

இரண்டில் ஒன்றைக்
கழித்த பிறகும்
இரண்டு ஒன்று
மீதி இருக்க
மூன்றாகினோம்..!!

இயல் முழு மெய்யாகி
( உன்னில் நான் / என்னில் நீ )
சரி பாதி
விகிதமுற்றோம் !!!

எண்ணுரு பிழையிலும்
நுண்ணளவு பிரி வற்று
முடிவுறா தொடர் பெற்றோம் !!



Saturday, February 4, 2012

கண்டு பிடித்த சக்கரங்கள்

அண்ணாந்து பார்த்ததில்
காவிக்குக் கீழ்
கரும்பச்சைக்கு மேல்
ஆழ்ந்த பொருள் கொண்டது
அசோகச்சக்கரம்..!!

தூரத்தில் பள்ளிக்கூடம் ,
நேரத்தில் வரவைத்தது
குதிகால் எட்டாத
மிதிவண்டிச் சக்கரங்கள்..!!

கருவறை விட்டு
கடைவீதி வந்தார் - கடவுள்
ஊர் கூடித்
தேர் இழுத்த
உருளைச் சக்கரத்தில்..!!

பக்கத்து நகரப்
பயணப் பட்டதில்
நான்கு திசை காட்டியது
சாலைப் பேருந்தின்
நான்கு சக்கரங்கள்..!!

ஏற்றத் தாழ்வை
எடுத்து விரைந்தது
பயணிக்க கிட்டாத
பணக்கார நண்பனின்
'பைக்' சக்கரங்கள்..!!

பஞ்சம் பிழைக்கப் பட்டினத்திற்குப்
புறப்பட்டதில்
காடு மலை வயல்
கடந்து சென்றது
இரண்டு தண்டவாளத்தில்
இணைந்த சக்கரங்கள்..!!

உயிர் தப்பிப் போகும்
விபத்து , அபாயத்தில்
விரைந்து உதவியது
மருத்துவ ஊர்தி
அவசரச் சக்கரங்கள்..!!

உடல் அமர்த்திப் போகும்
இறுதி ஊர்வலத்தில்
உறவுகள் அழுகைக்கு
நகராமல் நகர்ந்தது
அமரர் ஊர்தியின்
மரச் சக்கரங்கள்..!!!

மண் விட்டுப் போனாலும்
காளவாசல் கிழவனிடமும்
கைக்குமைத்த குயவினடமும்
மிச்சம் இருக்கிறது ஓர்
அச்சோடு ஒற்றைச் சக்கரமும்.!!!

,....!!!!!