Saturday, February 18, 2012

மறதியின் நினைவுகள்

தாயின் 
கைகள் அரவணைப்பில் 
பால் குடி 
மறந்த பிறகு 
காய்ச்சி ஆரவைத்த 
பசுவின் பாலில் 
வேகமாக வளர்ந்தது குழந்தை

அறிவியல் புத்தகத்தை 
வீட்டில் மறந்து 
விட்ட போதும் 
பக்கத்து நண்பனோடு 
பகிர்ந்து கொண்டது படிப்பு 

பிறந்த நாள் 
வாழ்த்துச் சொல்ல 
மறந்த பிறகும் 
பிரியாமல் இருந்தது 
பிரியமான நட்பு 

கொத்துச் சாவியை 
கதவில் மறந்த நாளில் 
பத்திரமாக இருந்தது 
அம்மா சேர்த்து வைத்த 
ஐந்து பவுன் நகை 

அவசரத்தில் 
மறந்து மாற்றிப் போட்ட 
உள்ளாடையோடு 
நன்றாக கழிந்திருந்தது 
அன்றைய வேலை நாள் 

ஆங்கிலப்படம் 
பார்த்தவாறு 
தொலைகாட்சிப் பெட்டியை 
அணைக்காமல்
அப்படியே 
உறங்கிய நாளில் 
கனவுகள் இன்றிக் கடந்தது 
நள்ளிரவு 

முதலில் காதலித்தவள் 
முற்றிலும் மறந்த பிறகு 
அடுத்த காதலிக்கு 
அதிகமாக எழுதப் பட்டது 
கவிதைகளும் கடிதங்களும்

எப்போதோ 
மறந்து தொலைத்த 
செருப்பில் 
மற்றவர் கால்கள் 
பயணித்துக் கொண்டே இருக்க 

மறதியின் அத்தியாயங்களில் 
முழுமை அடைகிறது 
நினைவில் வைக்க முடியாத 
நிஜமான  வாழ்க்கை..!!!

No comments:

Post a Comment