மருந்து தடவாத குச்சி
மழைக்கு நனைந்தால்
மறு வெய்யிலுக்கு
உலர்த்துவாள் அம்மா ..!!
தீக்குச்சி அடுக்க
எந்திரம்
வந்திட்ட பின்னர்
வாசலின் வெறுமையில்
'எண்ணிக்கொண்டிருக்கிறாள்' எதையோ ??
காற்றைப் போன்ற
அவளது சுறுசுறுப்பை
அவள் அடைத்துப் போட்ட
கடைசி தீப்பெட்டிக்குள் அடைத்துவிட்டது
சீனத்து தொழில் நுட்பம் ..!
அட போகட்டும் ,,,
மூலிச் சக்கைகளும்
மூடும் 'கொண்டி'களும்
சொல்லி வைத்த
பொய்யும் திருட்டும்
போய் விட்டது !!!
மெழுகுக் குச்சிகள்
சிறை பிடித்த
முழுஆண்டு விடுமுறை
வீட்டிற்குள்
வந்து விட்டது !!!
கழிவுக் குச்சியையே
எரிபொருள் ஆக்கிய
ஏழை வீடுகளை
காற்று அடுப்புக்கு
மாற்றி விட்டது !!!
மேல் கட்டை
அடிக் கட்டையை
அமுக்கும்
தத்துவமும்
அர்த்தமற்றுப் போனது !!!
போகட்டும் ,
மானுடம்
எந்திரமாகிப் போகும்
எதுவும்
எந்திரமயமே ஆகட்டும் !!!
“மேல் கட்டை
ReplyDeleteஅடிக் கட்டையை
அமுக்கும்
தத்துவமும்
அர்த்தமற்றுப் போனது!”
என்பது,
“மேல்தட்டு
அடித்தட்டை அமுக்கும்
அடிமைத் தத்துவமும்
அர்த்தமற்றுப் போனது!”
-என்று திருப்பி
வாசிக்கச் சொல்லும் வரிகள் அருமை!
மிக்க நன்றி சார் !!!
ReplyDeleteதீப்பெட்டி மட்டுமல்ல , பட்டாசு ஆலை, பஞ்சு மில் , கட்டுமானத் தொழில் , துப்பரவு போன்ற தொழில்களில் இன்னும் தொடரும் அடிமைத்தனம் அகற்றப்பட வேண்டும்.
"மானுடம்"
எந்திரமாகிப் போகும்
தொழில் எல்லாம்
எந்திரமயமே ஆகட்டும் !!!
- என்பதே கனவு !!