Saturday, August 25, 2012

மழை செய்




ஒற்றையடிப் பாதையாகிப்போன
ஓடையின் ஓரங்களில்
குறு மணலாய்த் தேய்ந்து
கொண்டிருக்கின்றன
கூழாங் கற்கள்..!!

முற்பகல்
வெய்யில் கொண்டு
விரட்டும் போதெல்லாம்
யாரோ ஒரு உழவனின் மதிய உணவிற்கு
ஒற்றை மரமாய் நிழல் கொட்டித்
தனித்திருக்கிறது - வெயிலுக்குக்
கனித்த வேப்ப மரம்.!!

விதைக்காமல்
உழுது கிடக்கும்
கரிசல் வரப்பின் 
மஞ்சநெத்தியில் மொய்க்கும்
முகவரி மறந்த 
மஞ்சள் வண்ணத்துப் பூச்சி ??

வேளாண்(மை) நிலம்
மைதானமாகிப் போன
கானல் நீரின் வெளியில் ,
பசி மயக்கத்தில்
எதையோ பேசிக்
கொண்டிருக்கின்றன
காக்கைகளோடு குருவிகள் ??

வெள்ளாமை இல்லாமலே வளரும்,
வெட்ட வெட்டவும் வளரும்,
கருவேலி மரங்கள்
எரிக்கப்படும் முன்னர்
என்ன சாபம் விட்டதோ
விவாசாயிக்கும்
விளையும் பயிருக்கும் ??

எனக்குத் தெரியாது ...,

நன்செய் புன்செய்
நாளும் பயிர் செய்ய
உண்டு செரித்து உயிர் செய்த
மனிதனில் எவனுக்கு
மழை செய்யத் தெரியும்?

Sunday, August 5, 2012

நவீனத்தின் மீதான பிரக்ஞை


முன் அறிந்த 
அளவுகளின் முனைகளில் 
அமர்வதில்லை 
என் புதிய 
ஓவியத்தின் தோற்றம் !!

புலன் உணர்த்தும் 
நளினங்களை 
சித்தரிப்பதில்லை 
நான் உடைத்துச் செதுக்கிய 
சிற்பத்தின் ரூபம் !!

யாவரும் எழுதி விட்ட 
வரிகளின் மொழியை 
பேசுவதில்லை 
என் இலக்கணத்துக் 
கவிதை நயம்  !!

களம் இன்றித் தொடங்கி
பின் முடிவதாய் 
தொடரும் 
என் ஆக்கத்துக்
கதையின் காட்சி(கள்) !!

மறுபடியும் 
முதலில் இருந்து
தொடர்தலாகவே முடிவடைகிறது 
நவீனத்தின் மீதான என் பிரக்ஞை...?!!!